நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகியின் தாயாருக்கு கட்சி சார்பில் வீடு கட்டி தரப்படும்-அண்ணாமலை பேட்டி


நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகியின் தாயாருக்கு கட்சி சார்பில் வீடு கட்டி தரப்படும்-அண்ணாமலை பேட்டி
x

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி ஜெகனின் உடலுக்கு மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், ஜெகனின் தாயாருக்கு கட்சி சார்பில் வீடு கட்டி தரப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் கொலை செய்யப்பட்ட பா.ஜனதா நிர்வாகி ஜெகனின் உடலுக்கு மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், ஜெகனின் தாயாருக்கு கட்சி சார்பில் வீடு கட்டி தரப்படும் என்று தெரிவித்தார்.

பா.ஜனதா நிர்வாகி கொலை

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

இதற்கிடையே, ஜெகன் கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. பிரமுகர் பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் பிரபுவை ேபாலீசார் கைது செய்தனர்.

அண்ணாமலை ஆறுதல்

இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் நெல்லைக்கு வந்தார். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜெகனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து ஜெகனின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு, மூளிக்குளம் அருகில் உள்ள வெள்ளக்கோவில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

முன்னதாக அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தண்டனை நிச்சயம்

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜெகன் சமூக விரோத கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக தி.மு.க.வைச் சேர்ந்த மாநகராட்சி மண்டல தலைவரின் கணவர் பிரபு இருந்துள்ளார். அவர் மீது மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அதில் 16 கொலை வழக்குகள் உள்ளன. அவர் முதன் முறையாக தற்போதுதான் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். பா.ஜனதா மற்றும் குடும்பத்தினர் தொடர் போராட்டம் நடத்திய பிறகே பிரபு கைது செய்யப்பட்டு உள்ளார்.

போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால்தான் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் போலீசாரை சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு என இரண்டாக பிரிக்க வேண்டும். குற்ற வழக்குகளை போலீசார் சரியாக கையாள வேண்டும். தவறு செய்தால் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

வீடு கட்டித்தரப்படும்

கொலை செய்யப்பட்ட ஜெகனுக்கு திருமணமாகவில்லை, அவர் கட்சிக்காக உழைத்துள்ளார். அவருடைய தாயார் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். எனவே, அவருக்கு கட்சி சார்பில் வீடு கட்டி தரப்படும். அந்த புதிய வீட்டில் குடிபுகும்போது நான் வருவேன் என்று குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜன் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.



Related Tags :
Next Story