இறந்த தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


இறந்த தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x

பாலக்கோட்டில் இறந்த தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

பாலக்கோடு

தொழிலாளி சாவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன். தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அதே பகுதியில் உழவர் சந்தை முன்பு உள்ள மயானத்திற்கு உறவினர்கள் நேற்று குழிதோண்ட சென்றனர்.

அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் இந்த வழியாக எங்கள் தெருவிற்கு சாலை வசதி செய்ய வேண்டி உள்ளது. எனவே இங்கு உடலை அடக்கம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வேடியப்பன் தரப்பினர் இது காலம் காலமாக எங்களுக்கு சொந்தமான பகுதி. அதனால் இவ்வழியாக சாலை அமைக்க விடமாட்டோம் என்று கூறி குழிதோண்ட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதனால் இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தெரு சாலை அமைக்க வேண்டும் என்றால் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என போலீசார் கூறினர்.

அதனை தொடர்ந்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வேடியப்பன் உடல் அந்த சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story