ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு: மாற்று இடம் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் கேட்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். நெடுஞ்சாலையோரம் 50 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் நடவடிக்கையை கண்டித்தும், மாற்று இடம் கேட்டும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர். அதுபோல், ஜெய்பீம் புரட்சிப் புலிகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பிரபாகரனை தாக்கிய நபர்கள் மீதும், தாக்குதலுக்கு காரணமான நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன தலைவர் அருந்தமிழரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் தலைமையில் விவசாயிகள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "குன்னூர் அருகே ரெயில்வே சாலையின் கீழ் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப் பகுதியில் ஆண்டின் 9 மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் சென்று வர சிரமம் அடைகின்றனர். எனவே வைகை ஆற்றின் கரையோரம் பாலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுரங்கப் பாதை வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.