பக்கத்து தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு:மின்மாற்றியில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு
சுல்தான்பேட்டை அருகே பக்கத்து தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்மாற்றியில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சுல்தான்பேட்டை: சுல்தான்பேட்டை அருகே பக்கத்து தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மின்மாற்றியில் ஏற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பக்கத்து தோட்டத்திற்கு...
சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மயில்சாமி. விவசாயியான இவர், தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையே இவர், தனது தோட்டத்திற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இவரது பக்கத்து தோட்ட உரிமையாளர் பழனிச்சாமி. இவரது மனைவி சாவித்திரி, மகன் செல்வகுமார். இதில் மயில்சாமிக்கும், பழினிச்சாமிக்கும் இடையே தோட்டத்தில் பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்லடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர், ஊழியர்கள் சுல்தான்பேட்டை போலீசாரின் பாதுகாப்போடு மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க வந்தனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் பழனிச்சாமியின் ேதாட்டம் உள்ள பகுதியில் இருக்கும் மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மின்மாற்றியில் ஏற முயன்றதால் பரபரப்பு
இதையறிந்து பழனிச்சாமி, அவரது மனைவி சாவித்திரி, மகன் செல்வகுமார் ஆகியோர் உடனே வந்து மின்வாரிய ஊழியர்கள், போலீசாரிடம் எங்கள் தோட்டத்தில் இருக்கும் மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பை வழங்க முயன்றனர். இதற்கிடையே மயில்சாமிக்கு மின் இணைப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாவித்திரி மின்மாற்றியின் மேலே திடீரென ஏறி போராட முயன்றார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மயில்சாமியின் தோட்டத்திற்கு செல்லும் வழித்தடத்தை மறித்து குழித்தோண்டி பைப்லைனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் வழித்தடத்தில் தோன்டப்பட்ட குழியை மூட நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் மயில்சாமியின் தோட்டத்திற்கு மின் இணைப்பை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.