தீ தொண்டு நாள் கடைபிடிப்பு


தீ தொண்டு நாள் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதியன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டதில் மும்பை தீயணைப்பு துறையை சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள்.

அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதியன்று இந்தியா முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு அன்றைய தினம் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீ தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வீரவணக்கம்

இந்நிலையில் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் பலியான 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா கலந்துகொண்டு, பலியான 66 வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். மேலும் தமிழகத்தில் தீயணைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட 1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தீ விபத்துகளை தடுப்பதற்கான சாதனங்கள், உபகரணங்கள் ஆகியவை விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

ஒரு வார விழிப்புணர்வு

இந்நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், நிலைய அலுவலர்கள் வேல்முருகன், சுந்தர்ராஜன், சுந்தரேஸ்வரன், முகுந்தன், பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், வானூர், மரக்காணம், அன்னியூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலும் நேற்று தீ தொண்டு நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு வார காலம் தீத் தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்து தீ விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story