உலக பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைபிடிப்பு
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக பூஜ்ஜிய உமிழ்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
பூஜ்ஜிய உமிழ்வு நாள் என்பது கார்பன் உமிழ்வை குறைப்பதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கழிவுகளை குறைத்தல், பொருட்களை மறு பயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், ஆற்றல் திறனுள்ள உபகரணங்களை பயன்படுத்துதல், சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல், காலநிலை மாற்றத்தை தணிக்க, மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக பூஜ்ஜிய உமிழ்வு தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவரும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தாமல் நேற்று ஒருநாள் மட்டும் மின்சார வாகனம், மிதிவண்டிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலானோர் இதனை கடைபிடித்து வந்திருந்தனர். சிலர் புகை உமிழும் வாகனங்களில் வந்ததால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வாகனங்கள் கேட்டின் வெளியே வரிசைக்கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தது.