காலாவதியான சுங்கச்சாவடிகள் மீண்டும் செயல்படும்-மத்திய மந்திரி வி.கே.சிங் தகவல்


காலாவதியான சுங்கச்சாவடிகள் மீண்டும் செயல்படும்-மத்திய மந்திரி வி.கே.சிங் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:22 AM IST (Updated: 30 Dec 2022 5:55 PM IST)
t-max-icont-min-icon

மராமத்து பணிகள் செய்யப்பட்டு காலாவதியான சுங்கச்சாவடிகள் மீண்டும் செயல்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

புதுக்கோட்டை

பா.ஜனதா கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று பா.ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி வி.கே.சிங் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதாவது:-

கேள்வி:- காலாவதியான சுங்கச்சாவடிகள் எப்போது மூடப்படும்?

பதில்:- காலாவதியான சுங்கச்சாவடிகளில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு சுங்கச்சாவடிகள் மீண்டும் செயல்படும். தற்போது பரிசோதனையின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறோம். அதாவது வெளிநாடுகளில் இருப்பது போல் நேரடியாக வாகனங்களை நிறுத்தாமல் சுங்கச்சாவடி மேல் பொருத்தப்பட்ட நவீன கருவியின் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணம் வசூலிக்கும் வகையில் செயல்படுத்தப்படும். இதற்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இதே வேளையில் தற்போது சிலர் பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியில் சென்று வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அது சரி செய்யப்படும்.

சுங்கச்சாவடி அமைக்கப்படுமா?

கேள்வி:- தமிழகத்தில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்படுமா?

பதில்:- ஒவ்வொரு 60 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் இடையில் புதிதாக ஏதேனும் பால கட்டுமான பணி வருகிறபோது அதன் அருகிலேயே ஒரு சுங்கச்சாவடி அமைக்கக்கூடிய கட்டாயம் இருக்கிறது. சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் பணம் பராமரிப்பு, கட்டுமானம் மற்றும் மராமத்து பணிகளுக்காக சுழற்சி முறையில் செலவிடப்பட்டு வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

கேள்வி:- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?

பதில்:- அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்து வருங்காலத்தில் வருபவர்கள் மீண்டும் இந்த சட்டத்தை மாற்றம் செய்து விடாத வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் நிரந்தரமாக மாற்றம் செய்த பிறகு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

கேள்வி:- 8 வழி சாலைகள் அமைக்கும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுமா?

பதில்:- சட்டத்தின் அறிவுறுத்தல் படி மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும். ஒருவேளை நிலம் கையகப்படுத்த முடியாமலோ, மக்களுக்கு விருப்பம் இல்லாமலோ இருந்தால் அதை மக்களிடம் புகுத்த போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். அருகில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story