குடிநீர் குழாய் அமைக்க ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு


குடிநீர் குழாய் அமைக்க ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு
x

முள்ளிப்பாடி ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

கரூர்

எதிர்ப்பு

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சி, முள்ளிப்பாடி வடக்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரத்தில் பொது குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லாததால் பிரதம மந்திரியின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முள்ளிப்பாடி வடக்கு தெரு பகுதிக்கு குடிநீர் குழாய்கள் கொண்டு செல்லும் வழியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அவர்கள் இந்த வழியாக குடிநீர் குழாய் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் குடிநீர் குழாய் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முள்ளிப்பாடி வடக்கு தெரு பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குழாய் அமைக்கும் பணி

இதனை அடுத்து முள்ளிப்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் நீலா வேல்முருகன், கடவூர் தாசில்தார் முனிராஜ், ஒன்றிய ஆணையர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்பட்டது. பின்னர் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிநீர் குழாய்கள் அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தையின்போது இப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story