ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர விபத்து எதிரொலிரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?பயணிகள் கருத்து


ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர விபத்து எதிரொலிரெயில் பயணம் பாதுகாப்பானது தானா?பயணிகள் கருத்து
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 6:45 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர விபத்து நடந்த நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்பது குறித்து பயணிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந்தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டிமோதிக் கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது.

வரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்க ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதன்மேல் உள்ள நம்பகத்தன்மை போய்விடும்.

இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று உணருகிறீர்களா? என்று ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பயணிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

முற்றுப்புள்ளி

கொச்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அஜித்குமார் கூறும்போது, 'தொழில்நுட்ப புரட்சி நடந்து வரும் இந்த காலகட்டத்தில் ரெயில் விபத்து என்றால் கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அதுவும் நூற்றுக்கணக்கான உயிர் பலி ஏற்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்கு முதலில் ரெயில்வே வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் மெத்தனம் காட்ட வேண்டாம். ஓடும் ரெயிலில் பாதுகாப்பு முறை குறைவாக இருக்கிறது. இதனை மேம்படுத்தி தவறுகள் நடப்பதை தடுக்க வேண்டும். மற்றப்படி பிரச்சினை ஒன்றும் இல்லை. ரெயிலின் வேகம் போன்ற தொழில்நுட்ப தகவல்கள் பற்றி எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. விபத்துகள் நடப்பதை எவராலும் ஏற்க முடியாது என்பதால் ரெயில்வே நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல் இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றார்.

கேள்விக்குறியாக உள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த செல்வராஜ்:-

ரெயில் பயணம் என்பது பெரும்பாலாலும் பாதுகாப்பான பயணமாக இருப்பதாலும், பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதாலும் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதுமட்டுமின்றி குடிநீர், உணவு, கழிவறை, படுக்கை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் சவுகரியமாக பயணம் செய்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. வெகுதூரம் பயணம் செய்பவர்களும், குறிப்பாக முதியோர்கள் ரெயிலில் பயணம் செய்வதையே பாதுகாப்பாக கருதுகிறார்கள். சில சமயங்களில் ரெயில்வே ஊழியர்களின் கவனக்குறைவினால் கோர விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுபோல்தான் தற்போது ஒடிசா ரெயில் விபத்து உலகத்தையே உலுக்கிப்போட்டுள்ளது. இனி இதுபோன்ற எந்தவொரு ரெயில் விபத்து எங்கும் நடைபெறாத வகையில் ரெயில் பயணம் அனைவருக்கும் பாதுகாப்பான தித்திப்பான பயணமாக அமைவதை மத்திய அரசும், ரெயில்வே துறையும் உறுதிசெய்ய வேண்டும். ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணம் செய்வதால் அவர்களது உயிர்கள் விஷயத்தில் ரெயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் இருக்காமல் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக 70 பேர் பயணம் செய்யக்கூடிய பெட்டியில் 100 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். மத்திய அரசும், ரெயில்வே துறையும் அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் வருடந்தோறும் விழுப்புரத்தில் இருந்து 1,000 பேர் முதல் 1,500 பேர் வரை மந்த்ராலயத்திற்கு ரெயில் பயணம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் போதிய ரெயில் வசதிகள் இல்லாமல் இடநெருக்கடியில் சென்றுவருகிறோம். இதனாலேயே ரெயில் பயணத்தின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. முக்கியமான வழித்தடங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும். மிகவும் முக்கியமாக ரெயில் பெட்டிகளில் போலீஸ் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

தவிர்க்க முடியாதது

திண்டிவனம் ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கபில் கோல்ச்சா:-

ரெயிலில் பயணம் செய்வது முற்றிலும் பாதுகாப்பானது. விபத்து என்பது விமானம் முதல் கார் வரை தவிர்க்க முடியாதது. நடந்து செல்லும் போதுகூட தடுக்கி விழுந்தும், வாகனங்கள் மோதியும் விபத்துகள் ஏற்படுகிறது. வெகு தூரம் பயணம் செய்பவர்கள், ரெயிலில் பயணம் செய்வதைத்தான் விரும்புகிறார்கள். ரெயிலில் வெகுதூரம் பயணம் செய்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளது. உணவு முதல் கழிவறை வரை அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு கிடைப்பதால் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் ரெயிலில்தான் பயணிக்கிறார்கள். நீண்ட தூரம் செல்லும் ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு, ரெயிலிலேயே சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. ரெயில் நிற்கும் நிலையங்களில் உணவுகள் கிடைப்பதால் பயணிகள் உணவை பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஏழை முதல் வசதியானவர்கள் வரை குறைந்த செலவில் பயணம் செய்வதற்கும், பாதுகாப்பாக பயணிக்கவும் ரெயில் பயணமே உதவுகிறது.

பாதுகாப்பானது

மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த லாவண்யா:-

ஒடிசா ரெயில் விபத்து மிகவும் துயரமான சம்பவம். சிக்னல் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரெயில் பயணம் ஆபத்து என்பது தவறான கருத்து. சாலையில்கூட அடிக்கடி பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து என தினமும் நடக்கிறது. ஆனால் பஸ்சில் பயணம் செய்யாமல் இருக்கிறோமா?அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டாமல் இருக்கிறார்களா? இந்த ரெயில் விபத்து பெரியதாக கருதப்பட்டாலும் சிக்னல் குறைபாட்டால் நிகழ்ந்ததாக கூறப்பட்டாலும் அதற்காக ரெயில் பயணம் ஆபத்தானது என்று கூறிவிட முடியாது. ஏனெனில் வாகன நெருக்கடி இல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடிவது இந்த ரெயில் போக்குவரத்தினால்தான். பஸ் கட்டணத்தைவிட ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால், ரெயில் போக்குவரத்து இருக்கும் இடங்களில் சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் ரெயில் போக்குவரத்து பாதுகாப்பானதாகவே கருதுகிறேன்.

நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றது

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சங்கர்:-

கார், பஸ்சில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பயணம் ஒரு வகை ஆபத்தானதே. ஆனால் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற ஒன்று ரெயில் தான். இதில் உடல் சோர்வு அடையாமல் நம்மால் பயணிக்க முடியும். அதே நேரத்தில் இது எப்போதும் பாதுகாப்பான பயணமாகவே நான் உணர்கிறேன்.

கள்ளக்குறிச்சி க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கே.நடராஜன்:-

சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, பெங்களூர், மும்பை, புதுடில்லி போன்ற ஊர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும்போது ரயிலில் பயணம் செய்வது நமக்கு பாதுகாப்பாகும்.

அதேபோல் பஸ்சை விட ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யலாம். தூங்கி கொண்டு செல்லும் வசதி மற்றும் கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளது.

கார், பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக செலவு ஆகிறது. ரெயில் பயணம் செய்வதால், விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறினார்.


Next Story