ஒடிசா ரெயில் விபத்து; பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன் - அண்ணாமலை


ஒடிசா ரெயில் விபத்து; பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன் - அண்ணாமலை
x

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அங்குள்ள பேருந்துகளிலும் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரெயில் விபத்தால் இதுவரை 179 பேர் காயமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 50 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




Next Story