ஒடிசா ரெயில் விபத்து...சென்னையில் இருந்து பத்ராக் செல்லும் சிறப்பு ரெயில்...!
ரெயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சிறப்பு ரெயில் பத்ராக் செல்கிறது.
சென்னை,
ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அதேபோல், மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது.
ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 7.20 மணிக்கு சென்னையில் இருந்து ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை அழைத்து கொண்டு சிறப்பு ரெயில் ஒன்று பத்ராக் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது