தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையின்மையப்பகுதியில் சிமெண்டு தடுப்புகளை முறையாக அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சிமெண்டு தடுப்புகளை முறையாக அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சிமெண்டு தடுப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம்டி ஞானதேவ் ராவ், சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி 413 பேர் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்திநகர் பகுதியில் உள்ள ஆதிதிராவிட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு, நிலஒப்படைப்பு திட்டத்தின் கீழ் அரசால் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தை சட்டவிரோதமாக போலி ஆவணங்களை உருவாக்கி அபகரித்து உள்ளவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கி வாழ்வுரிமையை பாதுகாத்து நீதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
விவசாய நிலங்கள் பாதிப்பு
தமிழக மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் காற்றாலை அமைத்து வருகிறது. இந்த காற்றாலைகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் காற்றாலை அமைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஆதிதிராவிட மாணவியர் விடுதி விவகாரம்
தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, செயலாளர் பூமயில், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாசரேத் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதிக்குள் கடந்த 10-ந் தேதி அதிகாலையில் ஒருவர் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்து உள்ளார். அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர் மீதும், நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மையத்தடுப்பு
சுகன் கிறிஸ்டோபர் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தடுப்புகளை உடைத்து வாகன ஓட்டிகள் விதிகளை மீறி சாலையை கடந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுப்புகளை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.