தைப்பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலையை வெளி மாநிலங்களில் வாங்க தமிழக அரசு முயற்சி; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

தைப்பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை வெளி மாநிலங்களில் வாங்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று ஈரோட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தைப்பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை வெளி மாநிலங்களில் வாங்க தமிழக அரசு முயற்சிக்கிறது என்று ஈரோட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
பேரணி
பாரதீய ஜனதா கட்சி சார்பில், 75-வது சுதந்திரதினத்தையொட்டி, ஈரோட்டில் தேசியக்கொடி ஏந்தி செல்லும் பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் வாரிசு அண்ணாதுரை பேரணியை தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேசியக்கொடியை ஏந்தியபடி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெருந்துறை ரோட்டில் ஊர்வலமாக வந்தனர்.இதைத்தொடர்ந்து பழையபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்த கைத்தறி தின விழாவில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது:-
இலவச வேட்டி-சேலை
தமிழகத்தில் நெசவாளர்களே இருக்கக்கூடாது என தி.மு.க. அரசு வேலை செய்து கொண்டு இருக்கிறது. தைப்பொங்கலின் போது வழங்கப்படும் வேட்டி, சேலை தயாரிப்பு பணி நெசவாளர்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் வேட்டி, சேலை வேண்டும்.
இதற்கு முன் ஜூலை மாதத்துக்குள் நூல் வாங்குவதற்கு டெண்டர் கொடுத்து விடுவார்கள். அப்போதுதான், 5 மாத காலத்தில் உற்பத்தி முடித்து, ஜனவரி மாதத்தில் வேட்டி, சேலை வழங்க முடியும். இதற்கு ஒரு சேலையை நெய்வதற்கு ரூ.200-ம், ஒரு வேட்டிக்கு ரூ.70 கூலி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு ரூ.486 கோடி வழங்கப்படும்.
10 சதவீதம் கமிஷன்
இந்தமுறை இலவச வேட்டி, சேலையை வெளி மாநிலத்தில் இருந்து வாங்க தமிழக அரசு முயற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால்தான், ஜூலை வரை நூல் வாங்குவதற்கான டெண்டர் விடப்படவில்லை. வெளி மாநிலங்களில் வேட்டி, சேலையை வாங்கினால் 10 சதவீத கமிஷன் கிடைக்கும் என யோசிக்கின்றனர். உடனடியாக நூலுக்கான டெண்டரை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி நெசவாளர்கள் பிரிவு போராட்டம் நடத்த வேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. மாறாக ஒரு யூனிட்டுக்கு 70 காசு விலை ஏற்றியுள்ளனர். இலவச வேட்டி, சேலைக்கான ஒப்பந்தம் குறித்து மாநில அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதற்காக பா.ஜ க. போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.






