ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
x

திருவண்ணாமலையில் நிலநீர் எடுப்பு சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நிலநீர் எடுப்பு சான்று வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சான்று வழங்க லஞ்சம்

திருவண்ணாமலை புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்தவர் லியாகத்அலி (வயது 46). இவர் திருவண்ணாமலை காஞ்சி சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்கக் கோரி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கடந்த 15-ந் தேதி விண்ணப்பித்திருந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு செய்த சிந்தனைவளவன், நிலநீர் எடுப்புச் சான்று வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது.

அதிகாரி கைது

இதனால் மன வேதனை அடைந்த லியாகத் அலி, லஞ்சம் கொடுக்க மனமின்றி இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று லியாகத் அலி தனது குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிந்தனைவளவனை வரவழைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான லஞ்சஒழிப்பு போலீசார், சிந்தனைவளவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story