26 துரித உணவகங்களில் அதிகாரிகள் சோதனை


26 துரித உணவகங்களில் அதிகாரிகள் சோதனை
x

ஆத்தூரில் 26 துரித உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த கடைகளில் இருந்து 76 கிலோ இறைச்சி, மீன் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

ஆத்தூர்

அதிகாரிகள் சோதனை

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி இறந்ததை தொடர்ந்து ஆத்தூர் பகுதியில் நகரசபை சுகாதார அலுவலர் முத்துகணேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் கண்ணன் உள்ளிட்ட குழுவினர் நகர் முழுவதும் துரித உணவகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது நீண்ட நாட்களாக குளிர்சாதன பெட்டிகளில் வைத்து இருந்த இறைச்சி குழம்பு, மீன், மசாலா பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 76 கிலோ கோழி இறைச்சி, மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

மேலும் சுகாதாரம் இல்லாமலும், உரிய பாதுகாப்பு இல்லாமலும் தரமான உணவு பொருட்கள் இல்லாமல் சமைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு நகரசபை அலுவலர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் சோதனையின் போது கடைகளில் இருந்து உணவு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு கடைகளுக்கும் தரமான மசால் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். தரமற்ற முறையில் கோழி இறைச்சிகளை பயன்படுத்தினால் வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

3 பேர் மீது வழக்கு

மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கண்ணன், கீரிப்பட்டி பகுதியில் பீடா கடைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்த முருகேசன், ராஜா, ஈச்சம்பட்டியில் கந்தசாமி ஆகிய 3 பேரது கடைகளுக்கும் சீல் வைத்தார். மேலும் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story