பஸ் நிலையத்தில் கடைகளை பூட்டிய அதிகாரிகள்


பஸ் நிலையத்தில் கடைகளை பூட்டிய அதிகாரிகள்
x

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் வாடகை பாக்கி செலுத்தவில்லை எனக்கூறி அதிகாரிகள் கடைகளை பூட்டினர்.

தஞ்சாவூர்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி சார்பில் பொதுஏலம் விடப்பட்டன. இதில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கடைகளை ஏலம் எடுத்தனர்.

இதில் ஏலம் எடுத்தவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என செலுத்தினர். மேலும் 1 ஆண்டுக்கான வாடகை கட்டணத்தையும் முன்பணமாக செலுத்தினர். இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் கடைகளை நடத்தி வருகிறார்கள். இதில் டீக்கடைகள், உணவகம், பேன்சி ஸ்டோர், பேக்கரி கடைகள் உள்ளிட்டவை என 44 கடைகள் இயங்கி வருகின்றன.

அதிகாரிகள் பூட்டினர்

இதில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளில் பலர் வாடகை தொகையை கட்டி வருகின்றனர். சிலர் கட்டாமல் உள்ளனர். இந்த நிலையில் வியாபாரிகளை உடனடியாக வாடகை தொகையை செலுத்துமாறு மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்தநிலையில் நேற்று காலை பழைய பஸ் நிலையத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், வாடகை செலுத்தாத 4 கடைகளை பூட்டினர். இந்த தகவல் அங்குள்ள வியாபாரிகள் மத்தியில் பரவியதையடுத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் அங்கு திரண்டு வந்தனர்.

மேலும் வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டனர். பின்னர் அவர்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.



Related Tags :
Next Story