கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஐம்பொன் சிலைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்பு வருகிற மே 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் சட்டைநாதர் கோவில் மேல கோபுர வாசல் அருகே யாகசாலைகள் அமைப்பதற்காக குபேர மூலையில் பொக்லின் எந்திரம் மூலம் களிமண் எடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மண்ணிலிருந்து 22 ஐம்பொன் சிலைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பூஜை சாமான்கள், முழுமையான 410 செப்பேடுகளும், சேதம் அடைந்த நிலையில் 52 செப்பேடுகளும் ஆக மொத்தம் 462 செப்பேடுகள் இருப்பது தெரியவந்தது.
கலெக்டர் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம், மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் அர்ச்சனா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் சிலைகள், பூஜை பொருட்கள், செப்பேடுகள் ஆகியவைகளை கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னர் நேற்று முன்தினம் இரவு வருவாய் துறையினர் அந்த அறையை பூட்டி சீல் வைத்து சாவியை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். மேலும் சிலை பாதுகாப்பு அறை முன்பு ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் நேற்று சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் நிர்வாகி செந்தில், தமிழ்ச் சங்கத் தலைவர் மார்கோனி, சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறையின் சீலை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
தொடர்ந்து அறையில் இருந்த முழுமையான 410 செப்பேடுகளை பதிப்பக பிரிவின் கீழ் இயங்கும் திருக்கோவில் திரு மடங்களின் ஓலைச்சுவடி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நூலாக்க திட்ட பணி குழுவினர் தலைவர் தாமரை பாண்டியன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
400 கிராம் எடை
அப்போது அதிக அளவில் செப்பேடுகள் சீர்காழியில் தான் முதன்முறையாக கிடைத்துள்ளது எனவும் ஒவ்வொரு செப்பேடுகளும் 400 கிராம் எடை உள்ளது எனவும் தெரிவித்தனர்.
மேலும் தொல்லியல் துறை அதிகாரிகள் விரைவில் சிலைகள் குறித்து ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர். ஆய்வுக்கு பின்னர் தான் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அரசுக்கு சொந்தமானதா? அல்லது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதா? என அப்பொழுதுதான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.