அரசு ஊழியர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகங்கள்


அரசு ஊழியர்களின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகங்கள்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

ராமநாதபுரம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுத்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

தற்செயல் விடுப்பு போராட்டம்

தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தற்செயல் விடுப்பு எடுத்து அலுவலகங்களுக்கு வரவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்களாக இருப்பதால் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த நிலையில் இதுவரை அதனை செயல்படுத்தாமல் உள்ளதால் உடனடியாக வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், அதுவரை சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் சோமசுந்தர் தெரிவித்தார்.

அலுவலகங்கள் வெறிச்சோடின

சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்கத்தினரின் இந்த தற்செயல் விடுப்பு போராட்டம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுதுறை ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதன்காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த அலுவலகங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் கலந்து கொள்ளவில்லை என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை

திருவாடானையில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் தி.மு.க.வின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிபடி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவாடானை யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்கள் கார்த்திகேயன், கணேசன் ஆகிய 2 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இந்த அலுவலகங்களுக்கு நேற்று தங்களுடைய பணி நிமித்தமாக வந்த பொதுமக்கள் அலுவலகத்தில் யாரும் பணியில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Related Tags :
Next Story