கொள்ளிடம் ஆற்று கரையில் அதிகாரி ஆய்வு


கொள்ளிடம் ஆற்று கரையில் அதிகாரி ஆய்வு
x

சிதம்பரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் கரையை அதிகாரி ஆய்வு செய்தார்.

கடலூர்

சிதம்பரம்,

கொள்ளிடத்தில் வெள்ளம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் இருந்து அதிகப்படியான உபரி நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி முக்கொம்பு வந்து, அங்கிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள சிதம்பரம், வல்லம்படுகை, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயகொண்ட பட்டினம், சின்ன காரமேடு, பெரிய காரமேடு கீழ்திருக்கழிப்பாலை, பெராம்பட்டு , காட்டுமன்னார் கோவில் ஆகிய பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதிகாரி ஆய்வு

கொள்ளிடத்தில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. பாதிப்புக்கு உள்ளான மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று காலை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி, பெரிய காரைமேடு, சின்ன காரைமேடு, கீழ திருக்கழிப்பாலை, பெராம்பட்டு பகுதி, கீழ் திருக்கழிப்பாலை கிராமத்தில் தடுப்பு சுவர் விழுந்ததால், கரை அரிப்பு ஏற்பட்டு உடையும் நிலையில் இருந்ததையும் பார்வையிட்டனர். மேலும், அந்த பகுதியில் நிரந்தரமாக தடுப்பு சுவர் அமைப்பதற்கும் ஆய்வு செய்தார்.

தடுப்பு சுவர்

அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் கரையை பலப்படுத்தும் பணியையும், நிரந்தரமாக தடுப்பு சுவர் எழுப்புவதற்கு ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதுடன், அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது கடலூர் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமார், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Next Story