வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு


வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு
x

வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும் (பொறுப்பு), பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவா் எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தையும், பின்னர் அவர் வடக்கு மாதவியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரம்மதேசம் கிராமத்தில் கோனேரி ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் மீதம் உள்ள பணிகளை மிக விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், நுண்ணீர் பாசனம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று பார்வையிட்டு, திட்டத்தின் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் வாலிகண்டபுரம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுவரும் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று திட்டம் எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கின்றது என்பது குறித்து கேட்டறிந்தார். வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா சைக்கிள்களின் தரம் குறித்தும், தெரணி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் நீர்வழித்தடங்கள் தூர்வாரும் பணிகளையும், அரசு மகளிர் விளையாட்டு விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி மற்றும் சம்மந்தப்பட்ட பகுதிகளின் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story