வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பில், ஏமப்பேர் குளம் மேம்பாடு, சிறுவர் பூங்கா, நடைப்பயிற்சிக்கு பாதை அமைக்கும் பணி பேன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு செய்தார். பின்னர், ஏமப்பேரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நீர் உந்து நிலையம் மற்றும் ஏமப்பேரில் ரூ.1 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனம் மேடை, சீத்தாராம் பூங்காவில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், விநாயகா நகரில் ரூ. 68 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது, அனைத்து பணிகளையும் தரமாகமாகவும், விரைந்தும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நகராட்சி குப்பைகள் தரம் பிரிப்பது மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படும் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் விஜயகுமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் குபேந்திரன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, இணை இயக்குனர் (மாநகராட்சிகள்) பாரிஜாதம், கடலூர் மண்டல உதவி இயக்குநர் பேரூராட்சிகள் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.