மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்க நிர்வாக அனுமதி


மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்க நிர்வாக அனுமதி
x
தினத்தந்தி 23 April 2023 7:00 PM GMT (Updated: 23 April 2023 7:00 PM GMT)

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நகரும் படிக்கட்டுகள்

தமிழகத்தின் பழைமையான மற்றும் முக்கியமான ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றாக மயிலாடுதுறை ரெயில்வே சந்திப்பு விளங்குகிறது. இங்கு, முதலாவது நடைமேடையில் இருந்து 3-வது நடைமேடைக்குச் செல்ல படிக்கட்டுகளில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளதால் முதியவர்கள் மற்றும் சுமையை தூக்கிச் செல்பவவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே, மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மத்திய மந்திரியிடம் மனு

இந்த நிலையில், தென்னக ரெயில்வே தலைமையகம் மயிலாடுதுறையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு வக்கீல் கே.ராஜேந்திரன் கூறியதாவது:- மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடைக்கு செல்வதற்கு முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் படும் சிரமம் மற்றும் இங்கு எஸ்கலேட்டர் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி எல்.முருகனிடம் நேரடியாக மனு அளித்து வலியுறுத்தினோம்.

இதனை ஏற்று அவர் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ணவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி கடிதம் அனுப்பினார். மேலும் நேரிலும் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட ரெயில்வே மந்திரி மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் 2 எஸ்கலேட்டர்கள் அரசு மூலம் அமைக்கப்படும் என தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி உரிய நிதி ஏற்பாடுகளை செய்துள்ளார்.

ரெயில்வே தலைமையகம் உத்தரவு

இதில் தற்போதைய முன்னேற்றமாக தென்னக ரெயில்வே தலைமையகம் ஏப்ரல் 19-ந் தேதி அன்று ஒரு ஆணை பிறப்பித்தது. அதில் 2023-24-ம் நிதி ஆண்டுக்குள் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு 3 மாதத்துக்கும் பணி முன்னேற்றம் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த பணியானது முற்றிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் நடைபெற உள்ளது. இதற்கான உரிய நிர்வாக அனுமதியை ரெயில்வே போர்டு வழங்கியுள்ளதால் இப்பணி விரைவில் தொடங்கி நடப்பாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அமைக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story