நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் ஆய்வு


நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்க அதிகாரிகள் ஆய்வு
x

நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் நெல்லை சந்திப்புக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் பொருட்காட்சி மைதானத்தில் நிறுத்தப்பட்டு, தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நெல்லை மாநகர பகுதியில் ஓடுகின்ற நகர பஸ்கள் அனைத்தும் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது.

பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை டவுனுக்கு செல்லக்கூடிய பஸ்கள் சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு வந்து பயணிகளை இறக்கி விட்டுவிட்டு மீண்டும் கொக்கிரகுளம் ரவுண்டானாவுக்கு சென்று திரும்பி அங்கிருந்து நெல்லை டவுனுக்கு செல்கின்றன. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் பல பஸ்கள் நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு வராமலேயே டவுனுக்கு சென்று விடுவதாக புகார்கள் வந்தன. மேலும் சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு வந்து செல்லும் சில பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.

அத்துடன் பஸ்கள் கொக்கிரகுளம் ரவுண்டானா வழியாக செல்வதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே ரவுண்டானா அமைத்து அங்கேயே பஸ்களை டவுனுக்கு திருப்பி விடுவதற்கு கலெக்டர் கார்த்திகேயன் முடிவு செய்தார். இயைடுத்து இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சுந்தர் சிங், உதவி கோட்ட பொறியாளர் சசிகலா, நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் காமேஸ்வரன், இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர்கள் கென்னடி, பாண்டித்துரை, நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் முனிசாமி, பழனிராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று நெல்லை சந்திப்பு அண்ணா சிலை பகுதியில் ஆய்வு செய்து இடங்களை குறித்து வைத்துள்ளனர். இதற்கான அறிக்கையை அவர்கள் விரைவில் கலெக்டரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து முன்னோட்டமாக வருகிற 14-ந்தேதி முதல் நெல்லை டவுனுக்கு செல்லும் பஸ்கள் சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு வந்த பிறகு அண்ணா சிலை பகுதி வழியாக திருப்பி விடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியையும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.


Next Story