நில சான்று கேட்டு அதிகாரிகள் கெடுபிடி: அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதில் சிக்கல்: விவசாயிகள் கவலை
கூடலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் நில சான்று கேட்டு அதிகாரிகளின் கெடுபிடியால் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது.
கூடலூர் அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வாளர் மாளிகை வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் டிராக்டர், வண்டிகள் மூலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து குவித்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் நிலச் சான்று பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு நகல் கொடுத்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும் என விவசாயிகளிடம், அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். சொந்த நில விவசாயிகளுக்கு நில உரிமை சான்று எளிதில் கிடைக்கிறது. ஆனால் குத்தகைக்கு 3 வருடத்திற்கு முன்பணம் கொடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நில சான்று கொடுக்க மறுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பாரதீய விஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ் பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் ஆகியோர் உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் சந்திரசேகர், கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் நில சான்று கேட்கும்பட்சத்தில் நில உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெற்று நில சான்று வழங்கலாம் என அவர் உத்தரவிட்டார்.