கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி - ஒன்றிய குழுத்தலைவர் பேச்சு


கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி - ஒன்றிய குழுத்தலைவர் பேச்சு
x

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், வரவு செலவுகள் குறித்தும் விவாதித்து அனுமதி வழங்கப்பட்டது.

பின்பு ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் பேசுகையில், 'கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதில் அதிகாரிகள் குளறுபடி செய்கின்றனர்' என்றார்.

மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்துக்கு கிராமப்புறங்களில் குடிநீர் குழாய்கள் முறையாக வீடுகளுக்கு அமைக்கப்படாமல் தன்னிறைவு பெற்றுவிட்டதாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கின்றனர் என்று ஒன்றிய குழு துணைத்தலைவர் சேகர் தெரிவித்தார்.

ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை தொடங்க அனுமதி கோரும் தொழில் நிறுவனங்கள் முறைப்படியான அமைவிட ஆவணங்களையும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளையும் கடைபிடித்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், ஆய்வு செய்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம், ஊராட்சிகளில் அமைக்கப்படும் பழங்குடியின குடியிருப்பு வீடுகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

முத்தியால்பேட்டை, ஆரியம்பாக்கம், படுநெல்லி, கோவிந்தவாடி, வாரணவாசி, ஏகனாமாபேட்டை ஊராட்சிகளில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, வையாவூர் உலகநாதன், சஞ்சய் காந்தி, லோகுதாஸ், பிரேமா ரஞ்சித்குமார், வேண்டாமிர்தம் வேதாச்சலம், சுனிதா பாபு, உள்ளிட்ட 17 பேரும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story