ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள்


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 23 Aug 2023 6:45 PM GMT (Updated: 23 Aug 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீதிந்திரீணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பூந்தோட்டம் பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி சுமார் 20 ஆண்டுகளாக 38 குடும்பத்தினர் தரை வாடகை செலுத்தி வசித்து வருகிறார்கள். இதில் 14 குடும்பத்தினர் தரை வாடகை செலுத்தாததால் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்களின் வீடுகளை அகற்றுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். அவர்களை திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. அர்சுனன் தலைமையில் அ.தி.மு.க.வினர் தடுத்து நிறத்தி அறநிலையத்துறைக்குசொந்தமான இடம் என்பதற்கான ஆவணத்தை காட்டும்படி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் அதிகாரிகளும், எம்.எல்.ஏ. அர்சுனன் தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் திவாகரன், செயல் அலுவலர் சூரியநாராயணன், தாசில்தார் அலெக்ஸாண்டர், தனி தாசில்தார் ராஜன்சண்முகம், ஆய்வாளர்கள் பாலமுருகன், சங்கீதா, பல்லவி, தினேஷ், கோவில் கணக்காளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் 14 குடும்பத்தினருக்கும் தரைவாடகை பாக்கியை செலுத்துவதற்கு அதிகாரிகள் கால அவகாசம் வழங்கினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story