இறந்த பெண்ணின் உடலை புதைக்க தோண்டிய குழியை மூடிய அதிகாரிகள்


இறந்த பெண்ணின் உடலை புதைக்க தோண்டிய குழியை மூடிய அதிகாரிகள்
x

ஆரணி அருகே இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி அருகே இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடலை புதைக்க குழி தோண்டினர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பி.ஆர்.நகர் பகுதியில் யாராவது இறந்தால் அவர்களுடைய உடலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரகுநாதபுரம் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று புதைத்தும், எரித்தும் வருகின்றனர். இதனால் பி.ஆர்.நகர் பகுதியில் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் மயானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சேவூர் ஊராட்சியில் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்பேரில் புதிய மயானம் அமைக்க சேவூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த்துறை சார்பில் இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் சேவூர் ஊராட்சி பி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அங்கு சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் குழி தோண்டினர்.

விரட்டியடிப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் சென்று இங்கு உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. அதனால் இங்கு உடலை புதைக்கக்கூடாது, குழியை மூட வேண்டும் என்று கூறினர்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கு உடலை புதைக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பேச்சுவார்த்தை சுமுக முடிவுக்கு வராததால் அங்கு இருந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பானது.

குழியை மூடினர்

பின்னர் அங்கு தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் அங்கு தோண்டப்பட்டிருந்த குழி மூடப்பட்டது. இறந்த மூதாட்டியின் உடல் ரகுநாதபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story