சேரன்மாதேவி, கல்லூர் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
‘வந்தே பாரத்’ ரெயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக சேரன்மாதேவி, கல்லூர் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பேட்டை:
'வந்தே பாரத்' ரெயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக சேரன்மாதேவி, கல்லூர் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
'வந்தே பாரத்' ரெயில்
நெல்லை- சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' ரெயிலை நிறுத்தி பராமரிப்பு செய்வதற்கு போதிய இடவசதி இல்லை.
எனவே நெல்லை அருகில் உள்ள கல்லூர், சேரன்மாதேவி, பாளையங்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அங்கு 'வந்தே பாரத்' ரெயிலை நிறுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்காக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று மதுரையில் இருந்து தென்காசி வழியாக சேரன்மாதேவிக்கு ஆய்வு ரெயிலில் வந்தனர்.
சேரன்மாதேவி ரெயில் நிலைய வளாகத்தை பார்வையிட்ட குழுவினர், அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தனர்.
கல்லூர் ரெயில் நிலையம்
பின்னர் கல்லூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற அதிகாரிகள், அங்கு 'வந்தே பாரத்' ரெயிலை நிறுத்தி பராமரிப்பு செய்ய வசதி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே கல்லூர் ெரயில் நிலையத்தில் மீண்டும் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.