பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) கு.சதீஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னை தொழிலாளர் ஆணையாளரின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம்-2009 மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் 2011, குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986-ன் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது பட்டாசு கடைகள் மற்றும் இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்கள் உள்ளனரா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாதது தொடர்பாக நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அபராதம்
இது தவிர 36 இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகள் 2011-ன் கீழ் உரிய அறிவிப்புகள் இல்லாத பொட்டல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.