ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகையை யொட்டி ஆம்னி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வெளி மாவட்டங்களில் பணி புரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் பஸ் போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகமாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் உள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் மேற்பார்வையில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையிலான குழுவினர் வாலாஜா மற்றும் பள்ளிகொண்டா, வாணியம்பாடி சோதனை சாவடிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆம்னி பஸ்களில் ஏறி பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணம் குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வு செய்யும் பணி சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், வருகிற 26-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.