மழையால் பாதிக்கப்பட்ட எள் வயல்களை அதிகாரிகள் ஆய்வு
மழையால் பாதிக்கப்பட்ட எள் வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தா.பழூர்:
அதிகாரிகள் ஆய்வு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகள் முற்றிலும் அழிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நேற்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எள் பயிர் செய்யப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நேற்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.
நிவாரணம் கிடைக்க...
அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 700 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாக, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதால், மழையால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் அரசுக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர்.
ஆய்வின்போது வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், வேளாண்மை உதவி அலுவலர் செல்வப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.