ஸ்ரீரங்கம் கோபுரசுவர் இடிந்ததன் எதிரொலி: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு


ஸ்ரீரங்கம் கோபுரசுவர் இடிந்ததன் எதிரொலி: சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2023 7:15 PM GMT (Updated: 7 Aug 2023 7:15 PM GMT)

ஸ்ரீரங்கம் கோபுரசுவர் இடிந்ததன் எதிரொலியாக, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

ஸ்ரீரங்கம் கோபுரசுவர் இடிந்ததன் எதிரொலியாக, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் ராஜகோபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இடிந்து விழுந்தது

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலில் உள்ள கோபுர பக்கச்சுவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது.

இதையொட்டி தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பழமையான கோவிலில் உள்ள ராஜகோபுரங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.

அதிகாரிகள் ஆய்வு

அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் ராஜகோபுரம் 7 அடுக்குகளைக் கொண்டு, 133 அடிஉயரத்துடன் உள்ளது. இதை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கோபுரம் சுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மற்றும் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில்களில் கோபுரங்களை ஆய்வு செய்தோம். இதில் இரு கோபுரங்களும் நல்ல முறையில் உள்ளன. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் ரூ.3 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதே போன்று பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலிலும் ரூ 60 லட்சம் செலவில் கோபுரம் புதுப்பிக்கப்படுவதுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story