விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் அதிகாரிகள் ஆய்வு


விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் அதிகாரிகள் ஆய்வு
x

வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி கலெக்டர் கவிதா உத்தரவிட்டார்.

வேலூர்

விநாயகர் சதுர்த்தி விழா

வேலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படுகிறது.

இதையடுத்து சிலைகள் 20-ந் தேதி ஊர்வலம் நடைபெறும். அன்றைய தினம் பொது இடங்கள், வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். வேலூரில் சத்துவாச்சாரியில் இருந்து சைதாப்பேட்டை வழியாக லாங்குபஜார் உள்ளிட்ட பகுதிகளில் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் ஊர்வல பாதையை வேலூர் உதவி கலெக்டர் கவிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலப்பாதையில் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விளம்பர பேனர், நடைபாதை கடைகள் போன்றவற்றை எடுக்கவும் உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.

நடைபாதையை ஒட்டி உள்ள கடைக்காரர்கள் பொருட்களை நடைபாதையில் வைக்காமல் கடையின் உள்ளே வைக்க அறிவுறுத்தப்பட்டது. குப்பைகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் பாதைகளை சரி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி கட்டவும் உத்தரவிடப்பட்டது.


Next Story