கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கல்குவாரியில் கனிம வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கிணத்துக்கடவு,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கல்குவாரியில் கனிம வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விதிமீறல்
கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் விதிகளை மீறி கற்களை உடைத்து கேரளாவிற்கு கொண்டு செல்வதாக கனிமவளத்துறையினருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொட்டையாண்டி புறம்பு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தனது விவசாய நிலம் அருகில் சுரேஷ்குமார் என்பவரது கல்குவாரியில் அரசு விதிமுறைகளை மீறி கற்கள் உடைக்கப்படுவதாலும், அங்கிருந்து கற்கள் சிதறி விளைநிலங்களுக்குள் விழுவதாலும் விளைநிலம் சேதம் அடைவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பொட்டையாண்டி புறம்பு பகுதியில் உள்ள சுரேஷ்குமார் என்பவரது கல்குவாரிக்கு மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, தாலுகா சர்வேயர் வடிவேல், வருவாய் ஆய்வாளர் கோபிலதா, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் குவாரி அமைந்திருக்கும் பகுதி, அதன் அருகில் எவ்வளவு தூரத்தில் விளைநிலங்கள் உள்ளன என்பது குறித்து அளவீடு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்த அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்து, அவர் மூலம் ஐகோர்ட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொட்டையாண்டி புறம்பு பகுதியில் தனியார் இடத்தில் மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, கடந்த 11-ந் தேதி நெம்பர்.10 முத்தூர் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் நேரில் சென்று தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மணல் தோண்டப்பட்டது குறித்து அளவீடு செய்யப்பட்டது.