உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை ஊக்குவிக்க குலுக்கல் முறையில் இலவச காய்கறி தொகுப்பு-விவசாயிகள் முயற்சிக்கு அதிகாரிகள் பாராட்டு
உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை ஊக்குவிக்க குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு இலவசமாக காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளின் இந்த முயற்சிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
பொள்ளாச்சி
உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை ஊக்குவிக்க குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு இலவசமாக காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. விவசாயிகளின் இந்த முயற்சிக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
உழவர் சந்தை
பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கோமங்கலம், கோமங்கலம்புதூர், புரவிபாளையம், சங்கம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதற்கான உழவர் சந்தை மூலம் விவசாயிகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளே தோட்டங்களை விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிப்பிற்கு உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து முயற்சி எடுத்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குலுக்கல் முறையில் தேர்வு
தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை உழவர் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்கிறோம். இதற்கு முன் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வருவார்கள். ஆனால் தற்போது தள்ளுவண்டிகள், வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறி விற்பனை செய்வதாலும், சாலையோரங்களில் சந்தைகள் நடத்தப்படுவதால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வருவோர் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வருகையை அதிகரிக்க இலவச காய்கறி தொகுப்பு திட்டத்தை விவசாயிகள் தொடங்கி உள்ளோம்.
அதாவது உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் அங்கு உள்ள ஒரு பெட்டியில் பெயர், செல்போன் எண் போன்ற விவரங்களை எழுதி போட வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பெட்டியில் போடப்படும் சீட்டுக்களை எடுத்து குலுக்கல் முறையில் காய்கறி தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து வகையான காய்கறிகளும் சுமார் 3 கிலோ எடை அளவில் வழங்கப்படுகிறது. நேற்று (நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை சுமார் 1000 பேர் வரை சீட்டு எழுதி போட்டு இருந்தனர். பொதுமக்கள் உழவர் சந்தையில் சுத்தமான, தரமான காய்கறிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
விவசாயிகள் முயற்சிக்கு பாராட்டு
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களை ஊக்குவிக்க குலுக்கல் முறையில் இலவச காய்கறி தொகுப்பு வழங்கி வருகின்றனர். இதற்கு விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் உழவர் சந்தையில் சராசரியாக ரூ.1 கோடி மதிப்புள்ள 300 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 52 ஆயிரம் நுகர்வோர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர் என்றனர்.