விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை-முறையீட்டு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு


தினத்தந்தி 19 April 2023 12:30 AM IST (Updated: 19 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி பேசினார்கள்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி பேசினார்கள்.

அதிகாரிகள் அலட்சியம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை மனுவாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடத்தி எந்த பயனும் இல்லை. தென்னை மரத்தில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு நோய் தாக்குதலை கட்டுப்படுத்த எந்த அறிவுரையும் வழங்குவதில்லை. கிராமங்களில் கூட்டம் நடத்தினாலும் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரிவதில்லை. கால்நடைகளுக்கு தற்போது வயிற்றுப்போக்கு அதிகமாக உள்ளது. எனவே கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு பீடர் கால்வாய், சேத்துமடை கால்வாய்களை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பாசன சபை நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் பாசன சபை தலைவர் தேர்தல் நடத்தி பகிர்மான குழு தலைவருக்கு தேர்தல் நடத்த ஒராண்டு ஆகிவிட்டது. எனவே திட்டக்குழு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.

காட்டு பன்றிகளால் தொல்லை

ஆனைமலை ஒன்றியத்தில் சாலை பணிகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும். ஆனைமலை வேளாண்மை துறை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை ஆனைமலை ஒன்றிய திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்து கொடுக்க வேண்டும். விவசாய பயிர்களை காட்டு பன்றி சேதப்படுத்துகிறது. கேரளாவில் தொல்லையை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தோட்டங்களில் தொந்தரவு செய்யும் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கவில்லை. ஆனைமலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆச்சிப்பட்டியில் புதிதாக வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால் தண்ணீர் தேங்கி நிற்பதால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில்லை. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

கூட்டத்தில் நேர்முக உதவியாளர் அரசகுமார், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில், விவசாயிகள் பட்டீஸ்வரன், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை-

சப்-கலெக்டர் எச்சரிக்கை

விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தென்னை மரங்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து கிராங்கள்தோறும் வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலையை சீரமைக்கும் போது ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி அமைக்க வேண்டும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்படும். ஆனைமலையில் ஒரு வாரத்திற்குள் வேளாண்மை துறை அலுவலகத்தை அருகில் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் துறை சார்ந்த அதிகாரிகள் ஒருவரே வர வேண்டும். வர முடியவில்லை என்றால் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். பதில் அளிக்க தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டியில் கழிவுநீர் தோட்டங்களில் தேங்குகிறது. இதனால் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் புளியம்பட்டியில் தோட்டங்களுக்குள் கழிவுநீர் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சப்-கலெக்டர் பிரியங்கா இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் மனு கொடுக்கும் போது, இதே பதில் தான் வருகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை என்றனர். இதையடுத்து வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தோட்டங்களுக்குள் கழிவுநீர் செல்வதை தடுக்க ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. என்ஜினீயர் சென்னைக்கு சென்று உள்ளதால், அவர் வந்ததும் திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடியாக பணிகள் தொடங்கப்படும். இதுகுறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும் என்றார். அதன்பிறகு விவசாயிகள் தர்ணாவை கைவிட்டனர்.




Next Story