மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
வள்ளியூர், பணகுடியில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
வள்ளியூர்:
மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஸ்ரா சப்னம், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் வள்ளியூர் பகுதியில் சுகாதாரமான முறையில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதற்காக பார்மலின் கலந்து பதப்படுத்தப்பட்ட மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள், கருவாடுகள் என சுமார் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடுகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 கடைகளுக்கு வள்ளியூர் நகர பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் அபராதம் விதித்தார். இந்த சோதனையின்போது மீன்வளத்துறை ஆய்வாளர் தேன்மொழி, ஓவர்சீயர் பாபுகுமார் மற்றும் பலர் உடன் சென்றனர்.
மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஸ்ரா சப்னம், ஆய்வாளர் தேன்மொழி, பணகுடி பேருராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் பார்மலின் கலந்து பதப்படுத்தப்பட்ட மீன்கள் உள்ளதா? என்று சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன மீன்கள், கருவாடுகள் என 9 கிலோ கைப்பற்றப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக பணகுடி பேரூராட்சி சார்பிலும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சசிகுமார் ஆகியோர் உடன் சென்றனர்.