கோவை உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை


கோவை உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 20 Sept 2023 1:45 AM IST (Updated: 20 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கலில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி இறந்ததை தொடர்ந்து கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தரமற்ற 34 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

நாமக்கலில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி இறந்ததை தொடர்ந்து கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தரமற்ற 34 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளி மாணவி பலி

நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரழந்தார். அதே ஓட்டலில் பிறந்த நாள் கொண்டாடிய மருத்துவ மாணவி மற்றும் அவருடைய நண்பர்கள் என 40 பேர் சவர்மா சாப்பிட்டதில் உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் கிராந்தி குமார் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டது.

6 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை டவுன்ஹால், சிங்காநல்லூர், காந்திபுரம், பீளமேடு, துடியலூர் உள்பட மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 36 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் 34 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர தடை செய்யப்பட்ட நிறமி பயன்படுத்தப்பட்ட 1½ கிலோ சில்லி சிக்கனை கைப்பற்றினர். இது தொடர்பாக 3 கடைகளின் உணவு மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் 6 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 1½ கிலோ பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட உணவுத்துறை அதிகாரி கூறியதாவது:-

கோவை மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். தற்போது சவர்மா மற்றும் கிரில் சிக்கன் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற 34 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தரமற்ற இறைச்சிகள் மற்றும் தடை செய்யப்பட்ட நிறமி பயன்படுத்தப்பட்டு இறைச்சிகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர டெங்கு காய்ச்சல் தொடர்பாக 33 இடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் தண்ணீர் தேங்கி, கொசு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆறுச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன், மகாராஜன் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது தரமற்ற கோழி இறைச்சிகளை வைத்திருந்த ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story