"தகுதி உள்ளவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்"-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


தகுதி உள்ளவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x

“தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.

மதுரை


"தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்" என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்தார்.

திருமண உதவித்திட்டம்

திருச்சி மாவட்டம் பூவலூர் தாலுகாவைச் சேர்ந்த காசிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டில் என்னுடைய மகளுக்கு திருமணம் நடந்தது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டத்தின்கீழ் எனது மகளுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை அந்த திட்டத்தின்கீழ் உரிய உதவிகளை வழங்கவில்லை. எனவே என் மகளின் திருமணத்தையொட்டி, சமூக நலத்துறை சார்பில் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகள் மறுக்கின்றனர்

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தகுதி உள்ளவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகின்றன. அதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். மனுதாரர் விவசாய கூலித்தொழிலாளி. அவரது ஆண்டு வருமானம் ரூ.48 ஆயிரம். அவருடைய மகளின் திருமணத்தையொட்டி அரசின் நலத்திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதி கேட்டு விண்ணப்பித்தும் அதிகாரிகள் அதை வழங்கவில்லை.

வருமானச்சான்றிதழை மனுதாரர் தாக்கல் செய்யாததால், அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதை ஏற்க இயலாது. வருமானச்சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறி, அவரது மனுவை பரிசீலித்து இருக்க வேண்டும்.

4 வாரத்தில் வழங்க வேண்டும்

எனவே மனுதாரரின் கோரிக்கையை இந்த கோர்ட்டு ஏற்கிறது. அவருக்கு உரிய திட்டத்தின்கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவித்தொகையை 4 வாரத்தில் அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story