ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடியாத்தத்தில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆய்வு நடத்த வேண்டும்
குடியாத்தம் நகர மன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எம்.பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் எம்.மங்கையரக்கரசன், பொறியாளர் சம்பத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் குடியாத்தத்தில் உள்ள அசைவ ஓட்டல்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற இறைச்சிகள் மற்றும் உணவு பண்டங்கள் வைத்திருக்கும் ஓட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன்:- உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அடிக்கடி ஓட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வசதி
ராணிபாஸ்கர்:- எங்கள் வார்டில் உள்ள நேருபூங்காவை திறக்க வேண்டும். தாழையாத்தம் நகராட்சி பள்ளியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கன்னிகாபரமேஸ்வரி:- ராஜகணபதி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி சமையல் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். சுடுகாட்டுக்கு செல்லும் புங்கனூர் அம்மன் சாலையை சீரமைக்க வேண்டும். எங்கள் பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து நகர மன்ற உறுப்பினருக்கு தெரிவிக்க வேண்டும்.
சி.என்.பாபு:- டெங்கு பரவல் காலம் என்பதால் கால்வாய்களை தூர் வார சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் வாங்க வேண்டும்.
நகரமன்ற தலைவர்:- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளம், நகராட்சி அதிகாரிகள் தங்களின் பங்களிப்பு அளித்தால் உடனடியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் வாங்கலாம் என்றார். அதற்கு நகர மன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் தன்னுடைய பங்காக ரூ.50 ஆயிரம் அளிப்பதாக தெரிவித்தார்.
பெரும்பாலான உறுப்பினர்கள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். பல இடங்களில் கழிவு நீர் சாலையில் செல்வதால், கால்வாய்களை தூர்வார வேண்டும். பல இடங்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை என புகார் தெரிவித்தனர்.
ஆட்டோ மோகன்:- நாய்களை பிடிக்க வேண்டும்.
நகராட்சி ஆணையாளர்:- நாய்களை பிடிக்க ஒரு குழு அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதல்படி விரைவில் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கால்வாய் வசதி
இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள பெரிய கால்வாய்கள் மற்றும் நகரின் முக்கிய கால்வாய்கள் புதிதாக கட்ட ரூ.11 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூ.6 கோடி விரைவில் ஒதுக்கப்படவுள்ளது. அதில் பெரிய கால்வாய்கள் புதிதாக கட்டப்படும். அதனால் சாலையில் கழிவுநீர் செல்வதும், மழை நீர் தேங்குவது முற்றிலும் தடுக்கப்படும். உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளின் பேரில் மின் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பழுதான மின்விளக்குகளை அகற்றி, புதிய மின்விளக்குகள் பொருத்த வேண்டும், குடியாத்தம் நகராட்சியில் 4 பூங்காக்கள் புதிதாக சீரமைக்கப்பட்டதில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பள்ளியில் தங்கு தடை இன்றி மாணவர்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.