அதிகாரிகள் தேவையின்றி வாக்கி டாக்கியில் பேசக்கூடாது -தெற்கு ரெயில்வே உத்தரவு
அவசியம் இருந்தால் மட்டுமே வாக்கி டாக்கி மூலம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயில் என்ஜின் டிரைவர்களுடன் பேச வேண்டும் என தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள் முக்கிய ரெயில் நிலையங்களாக கருதப்படுகிறது. இதில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாள் தோறும் 158 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், எழும்பூரில் இருந்து 96 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தை 1 லட்சத்து 78 ஆயிரம் பேரும், எழும்பூர் ரெயில் நிலையத்தை 1 லட்சத்து 17 ஆயிரம் பேரும் நாள்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல, எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்கள் ரெயில் நிலையங்களுக்கு உள்ளே வருவதற்கு முன்பாகவும், வெளியேறும் போதும் ரெயில் என்ஜின் டிரைவர்கள், சம்பந்தப்பட்ட ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிப்பார்கள்.
மனித தவறுகள்
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ரெயில்கள் தடம் புரளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதுபோன்ற, விபத்துகளுக்கு மனித தவறுகளும் முக்கிய காரணமாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும் வகையில் அவசியம் இருந்தால் மட்டுமே வாக்கி டாக்கி மூலம் ரெயில் நிலைய அதிகாரிகள் ரெயில் டிரைவர்களுடன் பேச வேண்டும் எனவும், தேவையில்லாமல் வாக்கி டாக்கியில் பேசக்கூடாது என அனைத்து கோட்டங்களுக்கும் தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அனைத்து கோட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேவையின்றி பேசக்கூடாது
ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போதும், புறப்படும் போதும் ரெயில் டிரைவர்களுடன், ரெயில் நிலைய அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் பேசுவார்கள். ஆனால், அடிக்கடி வாக்கி டாக்கியில் தொடர்புகொள்வது அதிகாரிகள் மூலம் கவனிக்கப்பட்டுள்ளது. இது ரெயில் என்ஜின் டிரைவர்களின் கவனத்தை திசைதிருப்பக்கூடும். இதுபோன்ற நடவடிக்கைகள் நிச்சயம் ரெயில் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல.
எனவே, விபத்துகள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளைத் தவிர்க்கும் வகையில் ரெயில் டிரைவர்கள், பாதுகாவலர்கள் ஏதேனும் தகவல் மற்றும் சந்தேகங்களை கேட்டால் மட்டுமே நிலைய அதிகாரிகள் அவர்களுடன் வாக்கி டாக்கியில் பேச வேண்டும். மற்ற நேரங்களில் தேவையின்றி வாக்கி டாக்கி மூலம் தொடர்புகொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். இதை ரெயில் நிலைய அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.