சேலத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகள் பாடுபட வேண்டும்கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்


சேலத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அதிகாரிகள் பாடுபட வேண்டும்கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்
x

சேலத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அரசு அலுவலர்கள் முனைப்பாக செயல்பட்டு பாடுபட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

சேலம்

சேலம்,

ஆய்வு கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பது குறித்தும், சாலை பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலை துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.

வாகன தணிக்கை

இருசக்கர வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வகையில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தை தவிர்ப்பதாகும்.

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். சேலம் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்கள் முனைப்பாக செயல்பட்டு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழிப்புணர்வு ஹெல்மெட்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன், உதவி கலெக்டர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுழலும் வகையிலான விழிப்புணர்வு ஹெல்மெட் மாதிரி இயக்கத்தை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.





Next Story