மாற்றுத்திறனாளி உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக வாரிசு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்-நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை


மாற்றுத்திறனாளி உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக வாரிசு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்-நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2023 12:00 AM IST (Updated: 20 July 2023 2:55 PM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே மாற்றுத்திறனாளி உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக வாரிசு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

டாக்டர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வளவனேரி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் இளவரசன் (வயது 65), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ராணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் அரியலூரில் வசித்து வந்த பெருமாள் மகன் இளங்கோவன் அரியலூரில் குழந்தை நல மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. நேரடி வாரிசும் யாரும் இல்லை.

இந்த நிலையில் இரண்டாம் நிலை வாரிசுகளாக டாக்டர் இளங்கோவனின் சகோதரிகள் தனபாக்கியம், அஞ்சலை, சரோஜா, சிவமாலை ஆகியோர் உள்ளனர். இதில் தனபாக்கியம், அஞ்சலை ஏற்கனவே இறந்து விட்டனர்.

வாரிசு சான்றிதழ்

டாக்டர் இளங்கோவன் இறந்து விட்டதால் இரண்டாம் நிலை வாரிசுதாரரான சிவமாலை கடந்த 15.12.2022 அன்று வாரிசு சான்றிதழ் கேட்டு அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பம் செய்தார். பின்னர் 19.12.2022 அன்று ஆன்லைன் மூலமும், 30.12.2022 அன்று சரோஜா என்பவர் நேரடியாகவும் விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே இவரது மனுவை டிசம்பர் 31-ந்தேதி கிராம நிர்வாக அலுவலர் நந்தகுமார், ஜனவரி 1-ந்தேதி வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் துணை தாசில்தார் கோவிந்தராசு ஆகிய வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து ஒரே நாளில் மனுவை தள்ளுபடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 4-ந்தேதி வருவாய்த்துறையினர் பதிவு தபால் மூலம் சரோஜா, சிவமாலை உள்ளிட்ட உறவினர்களுக்கு அனுப்பப்பட்ட சான்றிதழ் நகலில் வளவநேரியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளவரசன் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக பதிவு செய்துள்ளனர். இது இளவரசன் மற்றும் அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இது குறித்து அதிகாரிகளிடத்தில் அவர்கள் முறையிட்டும் எந்த ஒரு பதிலும் இல்லை என தெரிகிறது.

சிறுமியின் பெயரை நீக்க வேண்டும்

இதுகுறித்து மாற்றுத்திறனாளி இளவரசன் மைத்துனரும், இறந்து போன டாக்டர் இளங்கோவனின் சகோதரி மகனுமாகிய பரிமளம் கூறியதாவது:- 2-வது முறை வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த எங்கள் மனுவை உரிய முறையில் விசாரிக்காமல் உயிருடன் இருக்கும் மாற்றுத்திறனாளி இளவரசன் இறந்து விட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் எங்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி உள்ளனர். அதேபோன்று சிறு வயதிலேயே இறந்து போன அஞ்சலையின் பேத்தி மகாலட்சுமி, அவர் உயிருடன் இருப்பதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் சென்னை வருவாய் துறை கூடுதல் தலைமைச்செயலாளரிடம் மனு அளித்துள்ளோம். எனவே உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக பதிவு செய்து வாரிசு சான்றிதழில் இடம் பெறாத இளவரசனை வாரிசாக இணைக்க வேண்டும். மேலும் சிறுவயதிலேயே இறந்து போன அஞ்சலையின் பேத்தி மகாலட்சுமியின் பெயரை வாரிசு சான்றிதழில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story