இருளில் மூழ்கிய பழைய பஸ் நிலையம், சத்துவாச்சாரி சுரங்கநடைபாதை
இருளில் மூழ்கிய வேலூர் பழைய பஸ் நிலையம், சத்துவாச்சாரி சுரங்க நடைபாதையால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இருளில் மூழ்கிய வேலூர் பழைய பஸ் நிலையம், சத்துவாச்சாரி சுரங்க நடைபாதையால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமூக விரோத செயல்
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய வளாக பகுதியில் பயணிகள் காத்திருக்கும் இடங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். அவர்கள் இருளிலேயே இருக்கையில் அமர வேண்டிய நிலை உள்ளது.
பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் மிகவும் அச்சத்துடனே அங்கு நிற்கவேண்டிய நிலை உள்ளது. இந்த இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் அங்கு மதுகுடித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சுரங்க நடைபாதைகள்
இதேபோல வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள புதிய சுரங்க நடைபாதையிலும் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே சுரங்க நடைபாதையை கடக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் படிக்கட்டுகளில் இறங்கும் போது தவறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே விரைந்து அங்கு மின்விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும். மேலும் சத்துவாச்சாரி பழைய சுரங்க நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.