எடப்பாடி அருகே பயங்கரம்: மூதாட்டி கட்டையால் அடித்துக்கொலை-போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை
எடப்பாடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக்கொன்ற மருமகள் போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி:
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அடிக்கடி குடும்ப தகராறு
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் தானமூர்த்தியூரை சேர்ந்தவர் எல்லப்பன். இவருடைய மனைவி தைலம்மாள் (வயது 75). சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பன் இறந்து விட்டதால், தைலம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
மேலும் அதே பகுதியில் தைலம்மாளின் கடைசி மகனான மெய்வேல், தனது மனைவி செல்வி (43)யுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தைலம்மாளுக்கும், செல்விக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது வரை கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கொலை
இதனிடையே நேற்று காலை தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக செல்வி, தனது மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் இடைேய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, தனது மாமியார் தைலம்மாளை மண்வெட்டிக்கு பயன்படுத்தப்படும் கட்டையால் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மெய்வேல், அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தைலம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தற்கொலை
இதனிடையே மெய்வேலின் மனைவி செல்வி, மாமியாரை கொன்றதால், போலீசுக்கு பயந்து வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமியாரை கட்டையால் அடித்து கொன்று விட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.