உடும்பு வேட்டையாடிய முதியவர் கைது


உடும்பு வேட்டையாடிய முதியவர் கைது
x

குடியாத்தம் அருகே உடும்பு வேட்டையாடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

குடியாத்தம் அடுத்த ராமாலை காந்திகணவாய் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 72). இவர் நேற்று முன்தினம் மாலை ராமாலை வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள ஏரிக்கரை பகுதியில் இரண்டு உடும்புகளை பிடித்து செல்வதாக வேலூரில் உள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வனவிலங்குகள் குற்றத்தடுப்பு கட்டுப்பாட்டு நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பிரிவின் வனச்சரக அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து முதியவர் சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் இரண்டு உடும்புகளை பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரண்டு உடும்புகளை மீட்டு குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா, வனவர் மாசிலாமணி ஆகியோர் வனவிலங்குகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மீட்கப்பட்ட உடும்புகள் காப்புக்காட்டில் விடப்பட்டது.


Next Story