ஜவுளிக்கடைகளில் குழந்தைகளிடம் நகை திருடிய முதியவர் கைது


ஜவுளிக்கடைகளில் குழந்தைகளிடம் நகை திருடிய முதியவர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2023 2:45 AM IST (Updated: 3 Jun 2023 11:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் உள்ள ஜவுளிக்கடைகளில் குழந்தைகளிடம் நகை திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

மதுரையில் உள்ள ஜவுளிக்கடைகளில் குழந்தைகளிடம் நகை திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). சம்பவத்தன்று இவர் வைகை வடகரை ஆழ்வார்புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றிருந்தார். அங்கு அவர் 3-வது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் வந்த பேத்தியை காணவில்லை. தேடி பார்த்த போது அந்த தளத்தின் படிக்கட்டு பகுதியில் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார்.

பின்னர் அவரிடம் எப்படி இங்கு வந்தாய்? என்று கேட்ட போது ஒரு தாத்தா தன்னை தூக்கி வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் அணிந்திருந்த 4 கிராம் எடை கொண்ட தங்க வளையலை காணவில்லை. எனவே அந்த முதியவர் குழந்தையை நைசாக தூக்கி வந்து யாரும் இல்லாத இடத்தில் வைத்து வளையலை திருடி சென்றது தெரியவந்தது. உடனே பெரியசாமி இது குறித்து மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார்.

முதியவர் கைது

இதே போன்று மாட்டுத்தாவணி அருக உள்ள பிரபல துணிக்கடைக்கு சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைச்சாமி (63) அவரது பேத்தியுடன் வந்திருந்தார். அப்போது அவரது பேத்தி அணிந்திருந்த 1½ பவுன் தங்க வளையல், சங்கிலி ஆகியவற்றை யாரோ முதியவர் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து துரைச்சாமி மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அது குறித்து மாட்டுத்தாவணி போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த புகார்களின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த அந்த கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், முதியவர் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த முதியவரை தேடி வந்தனர். அதில் அவர் மதுரை தாசில்தார்நகர் நேரு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் அவர் பல்வேறு ஜவுளிக் கடைகளிலும் குழந்தைகளை குறி வைத்து நகைகளை திருடியது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து மொத்தம் 4½ பவுன் நகைகளையும் மீட்டனர்.


Related Tags :
Next Story