மோட்டார் சைக்கிள்களை திருடிய முதியவர் கைது
சிவகாசியில் மோட்டார் சைக்கிள்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அய்யனார்காலனியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் ஜக்கம்மாள் கோவில் அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் அவரது நண்பர் மணவாளன் என்பவரின் மோட்டார்சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த மோட்டார்ைசக்கிளை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் பார்த்த போது காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாசிலாமணி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்த முருகேசன் என்பவர் குமரேஸ்வரி என்பவரின் மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார். அந்த வாகனத்தில் சிவகாசி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த 2 திருட்டு சம்பவம் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அய்யனார் காலனியை சேர்ந்த கதிரேசன் (வயது 60) என்பவர் 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.