முதியவர் அடித்துக்கொலை


முதியவர் அடித்துக்கொலை
x

நெல்லை வண்ணார்பேட்டையில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரத்த காயங்களுடன் முதியவர் பிணம்

நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் (அதாவது மதுரை, ராஜபாளையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதி) சுமார் 72 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், ராஜபாளையத்தில் இருந்து பஸ்சில் நெல்லைக்கு வந்த முதியவர் வண்ணாா்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.

அப்போது, அவருடன் பஸ்சில் இருந்து இறங்கிய மர்மநபர், முதியவர் கழுத்தில் கிடந்த துண்டால் கழுத்தை இறுக்கி மறைவான இடத்திற்கு இழுத்து சென்றார்.

பின்னர் அந்த முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் என்று தெரியவந்தது.

கொலையானவர் யார்?

எனினும் கொலை செய்யப்பட்ட முதியவர் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story