தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பல்பாக்கி சின்ன மொரப்பம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). இவருடைய மனைவி பழனியம்மாள். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் அருண் பிரசாந்த்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அன்பழகன் அவரது வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய அருண் பிரசாந்த் வீட்டில் தனது தந்தை அன்பழகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து வந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, முதியவர் அன்பழகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.